
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தாங்கள் தெரிவித்த தீர்ப்பில் குறிப்பிடப் பட்டிருப்பதை உறுதி செய்து, மீண்டும் மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தை நாடலாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருப்பதாக தமிழகத்தில் ஊடகங்களில் பரவலாகக் குறிப்பிடப் பட்டன. மேலும், தமிழகத்தின் தரப்பில் பல்வேறு மட்டத்திலும் இதுகுறித்து விவாதங்கள் எழுந்தன. ஆனால், மேலாண்மை வாரியம் என்ற ஒன்று இல்லை என்றும், திட்டம் ஒன்று 6 வார காலத்துக்குள் நிறைவேற்றப் பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பதாகக் கூறி, கர்நாடக அரசு மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டிருந்த 6 வார கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அமைச்சர்கள் கூடி விவாதித்தனர். இதில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவதா என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இருப்பினும் இந்த விவகாரத்தை மீண்டும் உச்ச நீதிமன்றம் கொண்டு செல்ல உள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுமாறு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று கூறினார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசுக்கு கண்டனம் எதுவும் தெரிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, தீர்ப்பு நிறைவேற்றப் படவில்லை என்றால் தீர்ப்பை கொடுத்தவர்களிடம் செல்வதுதான் சட்ட வழிமுறை என்றார் ஜெயக்குமார்.



