புது தில்லி: தமிழகத்தின் மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள சந்தையூர் கிராமத்தில், பறையர் -அருந்ததியினர் இடையே நிலவி வரும் தீண்டாமை பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப் பட வேண்டும் என்றும், அங்கே தாழ்த்தப் பட்டோரை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யும் நிகழ்வைத் தடுக்கக் கோரியும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் ராமாசங்கர் கட்டேரியாவை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இராம.இரவிக்குமார், பிரச்னையை தூண்டி விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஏப்.3ம் தேதி, செவ்வாய்க் கிழமை இரவு 8 மணிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் ராமா சங்கர் கட்டேரியாவை புது தில்லியில் மோதிலால் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் மனு ஒன்றை அளித்துள்ளோம் என்று கூறினார். தன்னுடன் இந்த மனுவை அளிப்பதற்கு முருகவேல் சுவாமி வந்தார் என்றும், மனுவைப் பெற்றுக் கொண்ட கட்டேரியா, இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்றும் கூறினார் இராம.இரவிக்குமார்.
கட்டேரியாவிடம் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்ட மனுவின் தமிழ் வடிவம்…
’மதுரை மாவட்டம் – பேரையூர் தாலுகா -சந்தையூர் என்ற கிராமத்தில் பட்டியல்சாதி இனஇரு பிரிவினர் – பறையர் சமூகம் மற்றும் அருந்ததியினர் மக்களிடையே நிலவி வரும் மன வேறுபாடு – தீண்டாமைசூழல் வேதனை அளிக்கிறது.
மதுரை சந்தையூரில் இரு சமூகத் தவரிடையே நிலவி வரும் தலித் ஆதிக்க சாதி தீண்டாமை மனப்பான்மை மற்றும் இவர்களில் ஒரு பிரிவினர் சொல்லும் தீண்டாமை சுவர் என்ற குற்றச்சாட்டு விசாரிக்கபட வேண்டியதாக உள்ளது. மேலும் பறையர் சமூக மக்கள் -அருந்ததியினர் மக்களை தகாத வார்த்தை களில் பேசுவதாகவும்
தெரு வழியாக வரக்கூடாது என்று மிரட்டுவதாக அருந்ததியர் இன மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
எனவே நீதி கிடைக்கும் வரை – தலித் ஆதிக்க சாதியினரின் ஆதிக்க மனப்பான்மை – அடக்கு முறைக்கு எதிராக போராடுவதாக கூறி சுமார் 100 அருந்ததியினர் குடும்பத்தினர் குழந்தைகள் – பெரியோர்கள் என பாம்பு – தேள் போன்ற விஷஜந்துக்க்கள் வாழும் இடத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி – மலைப் பகுதியில் குடியேறி போராட்டத்தில் மழை – வெய்யில் என பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக இரு தரப்பு மக்களுக்கும் – ஆதரவாகவும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி எதிர்த்து – விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் இயக்கங்கள் என பல்வேறு அமைப்பினர் போராடி வருகிறார்கள். இதுவரை சுமூக தீர்வு எட்டப்படவில்லை – தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது .
இந்த பட்டியல் சாதி இன மக்களுக்கு இடையேயான _ இந்த மன வேறுபாட்டை அரசியல் கட்சிகள் அரசியல் ஆக்குவதை தடுத்திட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.
கோரிக்கை – 1
மதுரை மாவட்டம் – பேரையூர் – சந்தையூரில் நிலவி வரும் பட்டியல் சாதியினர் – பறையர் மற்றும் அருந்ததியினர் இன மக்களிடையே உள்ள பிரச்சினைக்கு சுமூக தீர்வு கண்டிட – அனைவரின் உரிமையும் பாதுகாத்திட_ உணர்வுகள் மதிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.
கோரிக்கை 2.
இந்த பிரச்சினையில் மிகப் பெரிய சதி திட்டத்தோடு – அரசியலாக்கி செயல்பட்டு வரும் கிறிஸ்தவர் – எவிடென்ஸ் அமைப்பின் கதிர் என்பவரும் -தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாமுவேல்ராஜ் உள்ளிட்ட கிறிஸ்தவ மதம் மாற்றும் – திட்டமிட்டு கலவர சூழலை உண்டாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.
கோரிக்கை 3.
தீண்டாமை சுவர் என்ற குற்றச்சாட்டு குறித்து தீர இரு தரப்பாரையும் அழைத்து – மாவட்ட நிர்வாகம் பேசி – சமூக நல்லிணக்க எண்ணம் கொண்ட குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்திட_ தேசிய தாழ்தப்பட்டோர் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.
கோரிக்கை 4 .
ஆலய வழிபாடு சம்பந்தமாக இரு தரப்பாரின் உணர்வும் -உரிமையும் மதிக்கப்பட்டு – யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் சுமூக தீர்வு கண்டிட நடவடிக்கை எடுத்திட வேண்டு கிறோம்
கோரிக்கை 5.
டீ கடைகளில் இரட்டை குவளை முறை கடைப்பிடிக்கபடுவதாக உள்ள சூழலை கண்காணித்து நடவடிக்கை எடுத்து – தீண்டாமை போக்கிட ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.
கோரிக்கை 6
மதுரை மாவட்டம் பேரையூர் சந்தையூரில் இந்த பிரச்சினையை தூண்டி விட்டு வேற்று மதத்தவர்கள் பெரிய அளவில்மதமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. இது குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து தடுப்பு நடவடிக்கை எடுத்திட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தை இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்…
– என்று அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.