சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று தமிழகம் தழுவிய அளவில் திமுக., சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் கல்வீச்சு, தர்னா, பஸ்மறியல், ரயில் மறியல் என போராட்டங்கள் வன்முறையின் திசையில் சென்றன.
இந்நிலையில், போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதுவரை இதுபோன்ற ஒரு முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றிருக்குமா என வியக்குமளவிற்கு இந்தப் போராட்டம் 100% வெற்றி அடைந்திருக்கிறது. போராட்டத்தில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.
டெல்டா பகுதிகளில் காவிரி உரிமை மீட்பு பயணம் 7-ஆம் தேதி தொடங்கும். அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் நடை பயணம் திருச்சி முக்கொம்பிலிருந்து தொடங்கும். அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை காலை 10:30 மணிக்கு நடைபெறும் என்று கூறினார் ஸ்டாலின்.
தொடர்ந்து, ஆளுநருக்கு இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லாததால் தான் தனியாக ஆய்வு செய்து வருகிறார். உச்ச நீதிமற்ற தீர்ப்பை அமல்படுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. மாநில அரசும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட வலியுறுத்தி மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்காமல் உள்ளது என்று கூறிய ஸ்டாலின், இந்தப் போராட்டம் ஏன் என்பது குறித்துக் கூறினார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து செவிசாய்க்காத காரணத்தால் தான் போராட்டம் என்றும், மத்திய அரசு செவி சாய்க்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும். காவிரி விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சென்னையில் உள்ள சத்யம், சங்கம், ஏ.ஜி.எஸ். போன்ற மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் காலை மற்றும் மதிய காட்சிகளை ரத்து செய்தன.