
சென்னை: காவிரிக்காக என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயார் என்று கூறியுள்ளார் திமுக.,. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி என்று குறிப்பிட்ட அவர், எஸ் சி, எஸ் டி பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஏப்ரல் 16இல் சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.
அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு ப்பயணம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நடைபெற உள்ளது. தமிழகத்தில் நேற்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதம் வெற்றி. இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள கால அவகாச மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. காவிரி மீட்பு பயணத்தை டெல்டாவில் நடத்துவது என்று ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானித்திருந்தோம். அதை எப்படி நடத்துவது என்று இந்தக் கூட்டத்தில் ஆலோசித்தோம்.
நாளை முக்கொம்புவில் இருந்து ஒரு குழுவும், 9ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு குழுவும் பயணத்தை தொடங்குகிறது. இந்தப் பயணத்தை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தொடங்கி வைக்கிறார். இந்தப் பயணத்தில் முக்கிய தலைவர்கள் மட்டுமல்லாது மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்காக எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் கொடுக்கும் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம் – என்றார் ஸ்டாலின்.



