
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில், மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்கப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது தங்கம்.
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை இன்று பளு தூக்குதல் போட்டியின் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்கம் வென்றார். மணிப்பூரைச் சேர்ந்த இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றவர்.
காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது தங்கம் இதுவாகும்.
முன்னதாக வியாழக்கிழமை நேற்று மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு தங்கமும், ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதலில் இந்தியாவின் குரு ராஜா வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
தங்கம் வென்ற சஞ்சிதாவுக்கு விரேந்திர ஷேவாக், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



