சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தை முன்னிட்டு, அதில் கலந்து கொண்டுள்ளார் ரஜினி. அப்போது, தற்போதைய அரசியல் பிரச்னைகளில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது என்று பரபரப்பு கிளப்பியபடி பதில் அளித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், மத்திய அரசுக்கு கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. சட்டச் சிக்கல்களைச் சந்தித்து, அமைச்சக ரீதியாக சிக்கல்கள் இன்றி, உச்ச நீதிமன்ற வழிகாட்டலை தெளிவுபடுத்தி பின்னர் மேலாண்மை வாரியம் அமைக்க வழி செய்து வருகிறது. அதனால்தான், உச்ச நீதிமன்றத்திடம், தீர்ப்பு வெளியிட்ட தேதியில் இருந்து மூன்று மாத கால அவகாசம் கோரியது. உச்ச நீதிமன்றம் கொடுத்த ஆறு வார காலக் கெடுவில், நான்கு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டங்களுக்கே நேரம் சரியான நிலையில், கர்நாடகத் தேர்தல் களமும் சூடு பிடித்துள்ளதால், காவிரி இப்போது வழக்கம் போல் அரசியல் ஆகிவிட்டது.
2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் காவிரியே கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு கை கொடுத்தது. இப்போதும் அதே உத்தியை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ்.
வழக்கமாக, மார்ச், ஏப்ரல் மாதங்களில் காவிரிப் பிரச்னை துவங்கும். இரு மாநிலங்களிலும் கொழுந்து விட்டெரியும் பிரச்னையை அணைப்பதற்காக, மழையே மனமுவந்து பெய்து, ஜூன் ஜூலையில் நீர் பெருக்கெடுக்கும். அதன்பின்னர் காவிரிப் பிரச்னை இரு மாநிலங்களும் சற்றே அடங்கிப் போய் வேறு பிரச்னைகள் முளைக்கத் தொடங்கும்.
இப்போது கோடைக்காலம் தொடங்குகிறது. காவிரியும் ஊற்று நீராலும் மழை நீராலும் உருவாகி ஓடி வரும் நிலையில், கோடைக்காலத்தில் வரும் குறைவான நீரையும் கர்நாடகம் அணைகளில் தேக்கி வைத்துள்ளதால், காவிரி இப்போது தமிழகத்தில் வறண்டே கிடைக்கிறது.
இந்நிலையில், காவிரி அரசியல் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் உருவெடுத்துள்ளதால், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக திரையுலகத்தினரும் இன்று போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று காலை சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் திரையுலகினரின் போராடட்ம் தொடங்கியது.
அதே நேரம் நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும் தொடங்கியுள்ளன. கிரிக்கெட் போட்டிகளால், காவிரி விவகாரம் இளைஞர்களிடையே மறக்கடிக்கச் செய்த் நீர்த்துப் போகச் செய்து விடும் என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், வள்ளுவர் கோட்டம் போராட்டத்துக்கு கலந்து கொள்ள தாமதமாக வந்த ரஜினி காந்த், காவிரி போராட்டத்தை முன்னிட்டு ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது என்று பரபரப்பாகப் பேட்டி அளித்தார்.
அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, ”ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது. அப்போதுதான் போராட்டம் தடைபடாமல் நடக்கும். போட்டியை நிறுத்த முடியாது என்றாலும் வீரர்கள் மக்கள் போராட்டத்தை ஆதரிக்கலாம். ஐபிஎல் போட்டியில் சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜுடன் ஆட வேண்டும். சென்னை மைதானத்தில் நடக்கும் போட்டியில் கருப்பு பேட்ஜுடன் ஆடலாம். ரசிகர்கள் கருப்புக் கொடியுடன் களத்திற்கு செல்லலாம். இதன் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம்” என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.
முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திரையுலகினர் நடத்தும் மௌனப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கியது. முன்னனி நடிகர்கள், நடிகைகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அரசியல் ரீதியாக, எதிர்க்கட்சிகள் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திரையுலகினரும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட இன்று காலை 9 மணிமுதல் 1 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மௌனப் போராட்டம் நடத்துகின்றனர். நடிகர் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பெப்சி அமைப்பினரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் கருப்புச் சட்டை அணிந்து காலையிலேயே அரங்கிற்கு வந்துவிட்டனர். போராட்டத்தில் பங்கேற்கும் நடிகர்கள் யாரும் பேசமாட்டார்கள் என நாசர் தெரிவித்தார்.
வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தும் நடிகர்கள் அமர வசதியாக பிரம்மாண்ட மேடை போடப்பட்டிருந்தது. வெயில் படாமல் இருக்க மேலே பந்தல் போடப் பட்டிருந்தது. போராட்டம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் நடிகர் நடிகைகள் வரத் தொடங்கினர்.
நடிகைகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் வருகை தந்துள்ளனர். நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், பிரசாந்த், சத்யராஜ், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, மக்கள் நீதி மய்ய உயர்மட்டக்குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர், பார்த்திபன் என முன்னனியினரும், நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள், பெப்சி அமைப்பினர் வந்திருந்தனர்.
நடிகர், நடிகைகளைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளனர். போலீஸார் அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.




