சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தமிழ்த் திரையுலகினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மௌனப் போராட்டம் நடைபெற்றது.
இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த மௌனப் போராட்டத்தில், நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை வகித்தார். இந்தப் போராட்டத்தில் நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி, பார்த்திபன், சிவகுமார், பசுபதி, சத்யராஜ், சிபிராஜ் உள்ளிட்ட நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். ரேகா, தன்ஷிகா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகைகளும், இளையராஜா, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காலை 9 மணிக்குத் துவங்கி, மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த மௌனப் போராட்டத்தின் முன்னர், ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசியலற்ற பொது நோக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட வேண்டும். திரையுலகினரின் கையெழுத்துக்களைப் பெற்று தீர்மானங்கள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்களுக்கான அரசு என்றால் மக்களின் உணர்வுகளை மதியுங்கள் என திரையுலகினர் முழக்கமிட்டனர். மௌன விரதப் போராட்டத்தின் பின் பேசிய விஷால், ‘விவசாயம் வாழ வேண்டும், விவசாயி வாழ வேண்டும் என்றார்.
மௌன விரதப் போராட்டம், இங்கே யாரும் பேசக் கூடாது என கூறி விட்டு சத்தியராஜை பேச அனுமதித்தனர். ஆனால் ஒழுங்கற்ற வகையில், சத்யராஜ் மைக் பிடித்துப் பேசியதை பலரும் விமர்சித்தனர். மௌன விரதம் என்று சொல்லிவிட்டு ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்று கேள்வி எழுப்பினர்.
ஒரு வழியாக பெரிய தாக்கம் ஏதும் ஏற்படுத்ததாத வகையில், ரசிகர்களின் கண்பார்வைக்கு விருந்தாக, அனைத்து திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டமாக இந்த மௌனப் போராட்டம் நடைபெற்று முடிந்தது.