காவிரி விவகாரத்தில் பாமக., இன்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, திண்டிவனத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ரயில் மீது ஏறிய பாமக தொண்டர் ரஞ்சித், மின்சாரம் தாக்கி நடைமேடையில் தூக்கி வீசப்பட்டார்.
ரயில் இன்சின் மீது ஏறி, மின்கம்பி மேலே செல்லும் போது அறியாமல் அதைத் தொட்டதால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை எழும்பூரில் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு, மதுரை, திருச்சி, தர்மபுரி, ஆம்பூர், அரியலூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
அது போல், வேலூர் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் புதிய ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட திரளான பா.ம.க.வினர் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் காலையிலேயே போலீசார் குவிக்கப் பட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து பா.ம.க. மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தத்தையொட்டி காஞ்சிபுரத்தில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் வாழப்பாடியில் 2,500 கடைகள் மூடப்பட்டுள்ளது.i அயோத்தியா பட்டினம், திருமானூர், பேளூர், தும்பல், கருமந்துறை உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப் பட்டுள்ளது.





