சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெற்ற பாதுகாப்பு துறை கண்காட்சியை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். கண்காட்சியை ஒட்டி நடைபெற்ற முப்படையினரின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் கடந்த11 ஆம் தேதி முதல் இந்திய பாதுகாப்புத் துறையின் கண்காட்சி நடைபெற்று வந்தது. 41 நாடுகள் பங்கேற்ற கண்காட்சியில் போயிங், ஏர்பஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் அரங்குகளை அமைந்திருந்தன. கண்காட்சியின் இறுதி நாளான சனிக்கிழமை அன்று பொது மக்கள் பார்வையிட அனுதிமதிக்கப்பட்டனர். விடுமுறை நாள் என்பதால் அதிக அளவில் மக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்தனர்.
காட்சி அரங்குகளில் பாதுகாப்பு நலன் கருதி சாதாரண வகை துப்பாக்கிகள், இயந்திர துப்பாகிகள், ராணுவ உடைகள், குண்டு துளைக்காத ஆடை, தொப்பிகள் போன்ற பொது மக்கள் பார்க்க விரும்பிய பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. எனினும் கண்காட்சி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். கண்காட்சியின் சிறப்பம்சமாக முப்படை வீரர்கள் நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
கண்காட்சி நிறைவு விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றதால், காலதாமதாக பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பார்வையாளர்கள் குவிந்ததால், திருவிடந்தை முதல் திருவான்மியூர் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ.தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கூட்டம் அலைமோதியதால் பிற்பகல் 2 மணிக்கு பிறகு அரங்குகளை காலி செய்ய தொடங்கிவிட்டனர். மேலும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையன்றே காலி செய்து விட்டனர். இதனால் சனிக்கிழமையன்று பிற்பகலுக்கு மேல் வந்தவர்கள் அனைவரும் கண்காட்சியை முழுமையாகக் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 5 போர்க் கப்பல்களை சனிக்கிழமை இன்று மட்டும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். இதற்காக, சென்னை தீவுத் திடலில் இருந்து காலை 8 மணி முதல் 20 அரசு பேருந்துகள் மற்றும் 15 தனியார் பேருந்துகள் சென்னை துறைமுகத்துக்கு இயக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை நாளையும் காலை 8 மணி முதல் போர் கப்பலை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் பாதுகாப்புத்துறையின் ராணுவத் தளவாடக் கண்காட்சி கடந்த 11-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதி நாளான இன்று இலவசமாக பல்வேறு நாடுகளின் ராணுவத் தளவாடங்களைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை தினமான இன்று கண்காட்சியைப் பார்வையிட காலை முதலே மக்கள் குவிந்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர். அவர்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து அரங்குகள் வைத்துள்ளவர்கள் ராணுவத் தளவாடங்களின் இயக்கங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
தங்கள் குழந்தைகளுக்கு ராணுவத் தளவாடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள பெற்றோர், அவர்களை நாட்டுக்காக ராணுவத்தில் சேர்க்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கண்காட்சி இருப்பதாகத் தெரிவித்தனர்.