சென்னை: காவிரிக்காகவும் ஐபிஎல்.,லுக்காகவும் திரண்ட கூட்டத்தை விடவும் அதிகமான அளவில் நடிகை சமந்தாவைப் பார்க்க ரசிகர் கூட்டம் கூடி ஆச்சரியப் படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா, தமிழ்த் திரையுலகில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும், தமிழக ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றவர். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் நாக சைதன்யாவுடன் திருமணம் நடந்தது. தனது திருமணத்திற்குப் பின் முதன் முறையாக சென்னை செங்குன்றம் வந்தார் நடிகை சமந்தா. அவரைக் காண திரளான ரசிகர்கள் கூடியதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
நாக சைதன்யாவுடன் நடைபெற்ற திருமணத்திற்குப் பின்னும் சமந்தா, நடிப்புப் பணியை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று செங்குன்றத்தில் ஒரு ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் கலந்து கொள்ள செங்குன்றம் வந்திருந்தார் சமந்தா அவர் வருவதை சற்று முன்னர்தான் அறிந்துகொண்டனர் இளைஞர்கள். இதை அடுத்து அங்கே இளைஞர்கள் பெருமளவில் திரளத் தொடங்கினர். சமந்தா வருவது குறித்த தகவல் வெளியான நிலையில், முன்கூட்டியே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இளைஞர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
பிரதான சாலையின் இரு புறங்களிலும், வளாக வாயிலிலும் ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். இதை அடுத்து ஏராளமான தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சமந்தாவைக் கண்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர், கடும் நெரிசல்களுக்கு இடையே நடிகை சமந்தா பாதுகாப்பாக அந்த வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். ஏராளமானோர் சமந்தாவை செல்போனில் போட்டோ எடுத்தனர்.
சமந்தாவைக் காண்பதற்கு தொடர்ந்து கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் செங்குன்றம் – சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அடுத்து போக்குவரத்து போலீசார் அழைக்கப்பட்டனர். அதன்பின்னரே போக்குவரத்து மீண்டும் சீரானது.
கடந்த வாரம் சென்னையில் நடந்த ஐபிஎல்., எதிர்ப்புக் கூட்டத்தை விடவும், மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட பல்வேறு கட்சிகள் திரட்டிய கூட்டத்தை விடவும், சமந்தாவைக் காண்பதற்கு தானாக அதுவும் குறுகிய நேரத்தில் கூடிய கூட்டம் மிக அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.