சென்னை: பாதிக்கப்பட்டவருக்கும், ஆளுநருக்கும் உள்ள விவகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்தின் முன் அனைவரும் சமம்; தவறு செய்தவர்கள் யாராயினும் தண்டிக்கப்படுவர் என்று கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவருக்கும், ஆளுநருக்கும் உள்ள விவகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது என்றார்.
பேராசிரியை விவகாரத்தில் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், நிர்மலாதேவி விவகாரத்தில் காவல்துறை நடத்தும் விசாரணை மீது நம்பிக்கை உள்ளது; தவறு செய்தவர்களை சிபிசிஐடி போலீசார் காவல்துறை முன்பு நிறுத்துவார்கள் என்று உறுதி படக் கூறினார்.
எச்.ராஜாவின் டுவிட்டர் பதிவு குறித்து ஸ்டாலின் குடும்பத்தார் அவதூறு வழக்கு தொடரலாம் என்று கூறிய ஜெயக்குமார், அதே நேரம், ஜனநாயக நாட்டில் யாருடைய வாயையும் கட்டிப் போட முடியாது என்று விளக்கம் அளித்தார்.
முன்னதாக, ஆளுநரிடம் மரியாதைக் குறைவாகக் கேள்வி கேட்கும் ஊடகத்தினர் அந்த (கருணாநிதியிடம்) தலைவரிடம் சென்று கேள்வி கேட்பார்களா என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.




