சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் இ-கோர்ட் கட்டண முறை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
வழக்கு தொடுப்பவர் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு தங்கள் கட்டணத்தை இணையதளத்தில் செலுத்துவதற்கேற்ப இ கோர்ட் கட்டண முறையை சென்னை உயர்நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இவ்வசதி முதல் கட்டமாக உயர் நீதிமன்றத்தின் சென்னை முதன்மை அமர்வுக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அமர்வுக்கும் வழங்கப் படுகிறது.
ஸ்டாம்ப் பேப்பர் எனப்படும் முத்திரைத்தாள் மூலம் வழக்குகளுக்கான நீதிமன்ற கட்டணம் செலுத்தும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்கு மாற்றாக, இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் நீதிமன்றக் கட்டணம் செலுத்தும் இ-ஸ்டாம்ப் எனப்படும் மின்னணு முத்திரைத்தாள் முறை சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இ-ஸ்டாம்ப் முறையை இந்திரா பானர்ஜியும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இ-ஸ்டாம்ப் முறையை எடப்பாடி பழனிசாமியும் தொடங்கி வைத்தனர்.