சென்னை: மீடியாவில் பணிபுரியும் சகோதரிகளை களங்கப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகரின் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவு நனவாகி வரும் நேரத்தில் மீடியாவில் பணிபுரியும் சகோதரிகளை களங்கப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
பத்திரிகைத்துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனது இந்த அவதூறால் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை உணர்வேன். ஒரு நடிகனாக அல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துள்ளாகி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
— Vishal (@VishalKOfficial) April 20, 2018
முன்னதாக, நடிகர் சங்க விவகாரத்தில் விஷாலின் நடவடிக்கையை விமர்சனம் செய்த எஸ்.வி.சேகர், சங்கப் பொறுப்பில் இருந்து விலகினார். அப்போது விஷால் கடுமையான சொற்களால் அவரை விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.