சென்னை: பத்திரிகையாளர்கள் குறித்து தவறான வகையில் கருத்துகளை பகிர்ந்த எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்டு ஊடகத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டை பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்ட போது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் மிரட்டல் சம்பவங்கள் பெண்களுக்கு அதிகம் நேர்கிறது என்று திருமலை.சா என்பவர் பதிவிட்ட பேஸ்புக் பதிவை எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், பெண் செய்தியாளர்கள் பலர் பாலியல் ரீதியாக துன்பப் பட்டே பொறுப்புகளைப் பெற முடிகிறது என்று கருத்துப் பதிவிட்டிருந்தார். இதனால் பெண் பத்திரிகையாளர்கள் கொதித்தெழுந்தனர். உடன், பத்திரிகையாளர்கள் சங்கங்களும் தங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டன. இதனால், எஸ்.வி.சேகருக்கு எதிரான போராட்டங்களில் செய்தியாளர்கள் ஈடுபட்டனர்.
போராட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள எஸ்.வி. சேகர் வீட்டை பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் எஸ்.வி. சேகர் வெளியே வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு அதற்கு மன்னிப்பு என்று ஒரு அறிக்கை விடுவது பிரச்னைக்கான தீர்வு அல்ல. எஸ்.வி. சேகர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்துக்கு அழைத்துச் சென்று, உள்ளே வைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் பின்னர் மாலை நேரம் விடுவிக்கப் பட்டனர்.
பேனாவும், கேமராவும் மைக்கும் பிடிக்க வேண்டிய கைகளில் கற்களை எடுத்து, சரமாரியாக வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் குறித்து சமூக மட்டத்தில் அதிர்ச்சி நிலவுகிறது. ஜனநாயகக் கருத்து என்ற வகையில் எதையும் கருத்து ரீதியாக எதிர்கொள்ளும் வலிமை வாய்ந்த துறையைச் சேர்ந்தவர்கள், ரவுடிகளைப் போல் கோஷமிட்டுக் கொண்டு கற்களை கைகளில் எடுத்து தாக்குதல் நடத்தியது, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஒருவேளை கட்சிகளைச் சேர்ந்த ரவுடிகளைத்தான் ஊடகங்களில் பணியில் சேர்த்திருக்கிறார்களோ என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
டிவி ஸ்டூடியோவுக்கு உள்ளே சொல்வீச்சில் ஈடுபட்டு, மற்றவரைப் பேச விடாமல் கருத்துகளை அமுக்கிவிட்டு ஜனநாயக ரீதியில் செயல்படுவதாகக் கூறிக் கொள்பவர்கள், இப்போது கற்களை வீசித் தாக்கி இதையும் ஜனநாயகப் போராட்டம் என்று சொல்லி விடுவார்களோ என பலரும் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர்.
கல்வீச்சில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் குறித்த வீடியோ…