
ஊடகங்கள் வேண்டுமென்றே நான் பேசியதை தவறாக சித்திரிக்கின்றன என்று கூறி, ஊடகங்கள் குறித்த தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார் பாஜக., துணைத்தலைவர் கே.அண்ணாமலை.
கோவையில் ஒரு நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு ரூ.6000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தால் பயன் அடைந்தவர்கள் குறித்து பேசினார் கே அண்ணாமலை. அப்போது ஓட்டுக்குப் பணம் கொடுப்பது என்பது குறித்து விமர்சித்துப் பேசிய அவர், தமிழக மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ.2 ஆயிரமாக திருப்பிக் கொடுப்பதுதான் தமிழக அரசியல். ஆனால் மோடி அரசு அப்படி அல்ல… என்று பேசினார்.
இதனிடையே அவரது இந்தப் பேச்சை திரித்து, சித்திரித்து, தமிழக அரசின் ரூ.2500 பொங்கல் பரிசுக்கு எதிராக அண்ணாமலை பேசியிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியானது.
இதற்கு தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார் கே.அண்ணாமலை. இது குறித்த அவரது டிவிட்டர் பதிவு….
சில ஊடகங்கள், பொங்கலுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களுக்கு ரூபாய் 2500 கொடுக்க இருப்பதை நான் எதிர்ப்பதுபோல, கோயம்புத்தூரில் நான் சொன்னதாக, தவறாக சித்தரித்து கூற முயற்சிக்கிறார்கள், அதை பிரசுரமும் செய்கிறார்கள் .
பொங்கலுக்கு கொடுக்கும் தொகையை முதலமைச்சர் அவர்கள் ரூபாய் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரத்து ஐநூறாக உயர்த்தி இருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். கொரோனா இருக்கும் இக்காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கும் இந்த பணம் மக்களுக்கு உதவியாக இருக்கும்
தேர்தல் நேரத்தில் , 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதை, அப்படிப்பட்ட அரசியலை பாஜக என்றும் விரும்பாது, அதை என்றும் செய்யாது என்று நான் கோயம்புத்தூரில் பேசியதை தவறாக சித்தரித்திருக்கிறார்கள். நான் கூறிய ஓட்டுக்காக கொடுக்கும் 2000 ரூபாயையும், பொங்கல் பரிசாக அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களை குழப்பவும் பெரும் முயற்சி செய்கின்றன சில ஊடகங்கள். உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும். வாழ்க,வளர்க தமிழ்நாடு… என்று குறிப்பிட்டுள்ளார்.