
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, மதுரை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
தற்போது தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 2021இல் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை தக்கவைக்க அதிமுக., அணியும், பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத நிலையில் அகோரப் பசியுடன் திமுக., அணியும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.
இந்நிலையில் நேற்றே தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி விட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து தனது சொந்த மாவட்டத்தில் இருந்து செண்டிமெண்டாகக் கிளம்பி விட்டார். திமுக., தலைவர் ஸ்டாலின், தனது தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வழிகாட்டலில், இணையதளம், காணொளி வாயிலான கூட்டங்கள் என்று இறங்கிவிட்டார்.
இதனிடையே, தமிழக அளவில் பாஜக., நடத்திய வேல் யாத்திரை பாஜக.,வுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. தாமாகச் சேர்ந்த கூட்டத்தைக் கண்டு உற்சாகத்தில் இருக்கும் பாஜக.,வும் தற்போது பிரசாரக் களத்தில் குதித்துவிட்டது
அதன் ஒரு பகுதியாக, மதுரை அருகே ஊமச்சிகுளம் மற்றும் சர்வேயர் காலனி ஆகிய பகுதிகளில் பாஜக சார்பில் நடிகையும் பாஜக., பிரமுகருமான குஷ்பு பிரசாரம் மேற்கொண்டார்.

அவரது பிரசாரத்தின் போது, அருகில் விவசாய அணி நிர்வாகி முத்துராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவருக்கு பாஜக., தொண்டர்கள் பெருமளவில் திரண்டு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.