செங்கல்பட்டு: தேச விரோத பிரிவினைவாதக் கருத்துகளை ஊடகங்களில் பேசி, பிரதமர் மோடியைக் கொல்ல வேண்டும் என்ற வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
முன்னதாக, இதே போன்ற விதங்களில் பேசியும் போராட்டம் என்ற வகையில் பொதுவுடைமைக்கு சேதம் ஏற்படுத்தி, மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட சீமான், பாரதிராஜா உள்ளிட்டோரை பார்க்க அனுமதிக்காத போலீசாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார் மன்சூர் அலிகான். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, கடந்த ஏப்.12 ஆம் தேதி சென்னையில் நடந்த ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகள் சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பாரதிராஜா, சீமான், அமீிர், கௌதமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டிருந்தனர்.
இதனிடையே அண்ணா சாலையில் காட்டுமிராண்டித் தனமாக, கிரிக்கெட் பார்க்க வந்த அப்பாவி ரசிகர்கள் மீதும் போலீஸார் மீதும் குண்டர் படையை ஏவி விட்டு தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மோடி சென்ற பின்னர் சீமானைக் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும், எனவே தான் பாரதிராஜா உள்ளிட்டோர் விடுவிக்கப்படவில்லை என்றும் செய்தி பரவியது. இதை அடுத்து பல்லாவரம் திருமண மண்டபத்துக்கு சென்ற மன்சூர் அலிகான், அங்கே சீமான் உள்ளிட்டோரைப் பார்க்க வேண்டும் என்றார். ஆனால், அவருக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து தன்னையும் கைது செய்யுமாறு அவர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். மேலும், அவர் பேசிய தேச விரோத, அபாயகரமான பேச்சுகள் வலைதளங்களில் வைரலாகப் பரவின. இந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டார்.
எனினும் சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டும் மன்சூர் அலிகான் மட்டும் விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து கடந்த சனிக்கிழமை சென்னை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த சிம்பு அங்கு ஆணையரை சந்தித்து மன்சூர் அலிகானை கைது செய்தது ஏன் என்று கேட்டார். மேலும் அவரை விடுவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை செங்கல்பட்டு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறி, மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.