
சென்னை: சென்னையில் வேளச்சேரியிலிருந்து கடற்கரை நோக்கிச் சென்ற பறக்கும் ரயிலில் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை தாவிப் பிடித்து பெண்ணை மீட்ட இளம் காவலருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி அளிக்கப் பட்டது.
சென்னை வேளச்சேரியிலிருந்து நேற்று இரவு 11 மணி அளவில் கடற்கரை நோக்கி பறக்கும் ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் ஆண் பெண் இருபாலரும் பயணிக்கும் பொதுப் பெட்டியில் பெண் ஒருவர் பயணித்தார். அடுத்தடுத்த நிலையங்களில் பயணிகள் இறங்கிச் சென்றுவிட, அந்தப் பெண் சோர்வு மிகுதியில் அயர்ந்து தூங்கியுள்ளார். ரயில் சிந்தாதிரிப்பேட்டை நிலையம் வந்தபோது அந்தப் பெட்டியிலிருந்த அனைவரும் இறங்கிச் சென்றுள்ளனர். அதில், அந்தப் பெண்ணும், வேளச்சேரியைச் சேர்ந்த சத்யராஜ் (25) என்பவரும் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில் சத்யராஜ் திடீரென அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்யத் தொடங்கியுள்ளார்.
திடீரென நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டார். அவரது கூச்சல் பக்கத்துப் பெட்டியில் பயணித்த ரயில்வே போலீஸ் சிவாஜி என்பவருக்குக் கேட்டது. உஷாரான அவர், அடுத்த பூங்கா நகர் நிலையத்தில் ரயில் நிற்கும் முன் ஓடிச் சென்று பக்கத்துப் பெட்டியில் தாவினார். அப்போது பெட்டிக்குள் பெண்ணை சத்யராஜ் பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக செயல்பட்ட சத்யராஜ், அந்தப் பெண்ணை மீட்டு, அந்த இளைஞர் சத்யராஜைப் பிடித்து ரயில்வே போலீஸில் ஒப்படைத்தார்.
வன்கொடுமை நிகழ்வில் இருந்து மீள இயலாத நிலையில் மயங்கிய அந்தப் பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், பின்னர் மனநல சிகிச்சைக்காக அரசு மன நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலியல் குற்றம் குறித்து உணர்ந்ததும் உடனடியாக செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்து இளம்பெண்ணை மீட்ட ரயில்வே எஸ்.ஐ சுப்பையா, காவலர் சிவாஜி இருவருக்கும் ரயில்வே ஐஜி பொன் மாணிக்கவேல் பாராட்டி தலா ரூ.5 ஆயிரம் வெகுமதி அளித்தார்.
இது குறித்துப் பேசிய ஐஜி பொன் மாணிக்கவேல், ”இளம்பெண் ஒருவர் இரவு 11 மணிக்கு மேல் தனியாக பயணித்துள்ளார். பெண்களுக்கான பெட்டி உள்ளது. ஆனால் அவர் ஆண், பெண் அனைவரும் பயணம் செய்யும் பொதுப் பெட்டியில் பயணம் செய்துள்ளார். நேரம் ஆக ஆக இளம்பெண் அசந்து தூங்கியதும், பெட்டியில் யாரும் இல்லாததை குற்றவாளி பயன்படுத்தியுள்ளார்” என்று கூறினார்.
பொதுவாக, பெண்கள் இரவு நேரத்தில் மகளிர் பெட்டியில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்றும், இரவு நேரங்களில் காவலர்கள் பாதுகாப்புக்கு உடன் வருவர் என்றும் போலீஸார் கூறினர்.



