மதுரை: கள்ளழகர் மதுரை நீதிமன்றம் பகுதியில் வைகை ஆற்றில் இறங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பெரியார்வழி முருகானந்தம் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் டாக்டர் அனிதா சுமந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர். ஆனால், அபராதத் தொகை அதிகம் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியதால், அவரின் கோரிக்கையை ஏற்று ரூ.25,000 ஆகக் குறைத்து உத்தரவிட்ட நீதிபதி, அந்த அபராதத் தொகையை எதிர் மனுதாரர்களுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மதுரை நீதிமன்றம் பகுதியில் கள்ளழகர் மண்டகப்படி அமைப்பதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை நகருக்கு வரும் கள்ளழகர், வழக்கமாக மதுரை நீதிமன்ற வளாக பாதை வழியேதான் வருகிறார். அங்கே வழக்கறிஞர் சங்கம் கள்ளழகரை வரவேற்று மண்டகப்படி அமைத்துள்ளது. அதற்கு எதிராக முருகானந்தம் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை வழக்கறிஞர், சுவாமி வழக்கமாக வந்து செல்லும் பாதையில் வரும் நீதிமன்ற மேற்கு நுழைவாயிலில் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் இல்லை என்று கூறினார். இதை அடுத்து, மனுதாரர் ஆதாரமின்றி விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்ததாகக் கூறிய நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றம், அறநிலையத்துறை ஆகியவற்றுக்கு அபராதத் தொகையைச் செலுத்துமாறு உத்தரவிட்டது.