சென்னை மயிலாப்பூரில், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களை செல்போனில் ஆபாசமாகப் படம் எடுத்து வைத்துக் கொண்டு, பின்னர் ரசித்த டாக்டர் சிவகுருநாதன் போலீஸாரால் கைது செய்யப் பட்டார்.
சென்னை மயிலாப்பூரில் முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் நாட்டு சுப்புராயன் தெருவில் கிளினிக் வைத்து வெகு காலமாக மருத்துவம் பார்த்து வருகிறார் டாக்டர் சிவகுருநாதன். ஆர்.எம்.கிளினிக் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் சிவகுருநாதன், எம்டி படித்த மூத்த டாக்டர். 64 வயதானவர். இந்த கிளினிக்கில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். காரணம் அவரது அணுகுமுறை.
மயிலாப்பூர் பகுதியில் இவரது பெயரும்கூட பிரபலமானதுதான். மயிலாப்பூர் சிட்டி சென்டர் பகுதியை அடுத்து உள்ள பகுதியிலும், நாட்டு சுப்புராயன் தெருவை அடுத்துள்ள குடிசைப் பகுதியிலும் வசித்து வந்த ஏழைகள் சிலருக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்து நம்பிக்கை பெற்றவரும் கூட! இந்த டாக்டர்தான் இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டு கைதாகியிருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம், மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் (35) என்பவர் சிற்றுண்டி விடுதி நடத்தி வருகிறார். பிராங்க்ளின் மனைவி அம்மு (29) தனது தாய் வீடான மயிலாப்பூர் ரூதர்புரத்துக்கு வந்திருக்கிறார்.
மயிலாப்பூர் வந்த அவருக்கு திடீரென மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கணவரிடம் கூறியுள்ளார். ‘பக்கத்தில் கைராசிக்கார டாக்டர் சிவகுருநாதன் இருக்கிறார் அவரிடம் கூட்டிக் கொண்டு செல்லுங்கள்’ என்று அம்முவின் தாயார் கூறியுள்ளார். ஏற்கெனவே இரண்டு முறை அம்மு அவரிடம் சிகிச்சை பெற்றதால் அவரிடம் சிகிச்சைக்காக அம்மு வியாழன் அன்று மாலை 7 மணி அளவில் தனது கணவருடன் சென்றுள்ளார்.
அம்முவை பரிசோதித்த டாக்டர் சிவகுருநாதன், அவரது கணவர் பிராங்க்ளினிடம் ‘வெளியே சற்று இருங்கள், நான் இவரை பரிசோதிக்க வேண்டும்’என்று கூறியுள்ளார். அவரும் வெளியே போய் அமர்ந்துள்ளார். யதேச்சையாக டாக்டர் என்ன பரிசோதிக்கிறார் என்று உள்ளே எட்டிப் பார்த்த பிராங்க்ளின் அதிர்ந்து போயுள்ளார்.
டாக்டர் சிவகுருநாதன் தனது செல்போன் கேமராவை அம்முவுக்கு தெரியாமல் தயார் செய்து, அம்முவை சோதிப்பது போல் ஆபாசக் கோணத்தில் படம் பிடித்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பிராங்க்ளின், அறைக்கு உள்ளே சென்று, ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று டாக்டர் சிவகுருநாதனைக் கேட்க, ‘நோயாளியைப் பரிசோதிக்கும் போது நீ ஏன் உள்ளே வந்தாய்… வெளியே இரு’ என்று கூறியுள்ளார்.
‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என் மனைவியை ஏன் செல்போனில் படம் எடுக்கிறீர்கள்?’ என்று பிராங்க்ளின் கேட்க, அப்போது தான் அம்முவுக்கு விபரீதம் புரிந்துள்ளது. அவரும் அதிர்ச்சி அடைந்து எழுந்துள்ளார். டாக்டரிடம் இருந்து செல்போனை பிராங்க்ளின் பிடுங்க முயற்சிக்க,அவர் உடனடியாக செல்போனில் தான் பிடித்த காட்சிகளை அழித்துள்ளார். தொடர்ந்து, மெமரி கார்டையும் பிடுங்கி வெளியே எறிந்துவிட்டாராம்.
இதை அடுத்து பிராங்க்ளின் டாக்டர் சிவகுருநாதனிடம் இருந்த மற்றொரு செல்போனைப் பிடுங்கி சோதித்துள்ளார். அதிலும் சிகிச்சைக்கு வந்த பெண்களை படம் பிடித்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து, அவரது செய்கை குறித்து அங்கே செய்தி பரவியது. சிகிச்சைக்கு வந்த இளம் பெண்களை பல்வேறு கோணத்தில் செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தது தெரிய வந்ததை அடுத்து, அவரைப் பிடித்த பொதுமக்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவரிடம் விசாரணை செய்து, செல்போனை சோதித்தபோது அதில் 60க்கும் மேற்பட்ட படங்கள், வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. என்ன நோக்கத்திற்காக டாக்டர் இவ்வாறு படம் எடுத்து வைத்துள்ளார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர் மீது அளிக்கப் பட்ட புகாரின் பேரில், டாக்டரைக் கைது செய்த போலீஸார் அவர் மீது 354(எ) (அடுத்தவர் அனுமதி இன்றி ஆபாசமாகப் படம் பிடித்தல்), 354 (சி) (அடுத்தவர் அனுமதியின்றி மறைந்திருந்து படம் எடுத்தல்) 4 (எச்) பெண் வன்கொடுமை ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.