சமூக வலைதளங்களில் பரப்பப் படும் பொய்யான செய்திகளை நம்பி மாணவர்கள் திசை மாறிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு கேட்டுக் கொண்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சமூக வலைதளங்களில்தான் மிக வேகமாக பொய்ச் செய்திகள் வேண்டுமென்றே பலரால் பரப்பப் படுகின்றன. சிலர், அது பொய்ச் செய்திதான் என்பதை உணரக் கூடிய தன்மை இல்லாத வகையில் இருப்பதால், பொய்ச் செய்திகளை விரைவாகப் பரப்பி விடுகின்றனர். மாணவ சமுதாயமோ இப்போது சமூக வலைத்தளங்களில் அடிமையாகிக் கிடக்கிறது. இப்படி, அவர்களைக் குறிவைத்து நடத்தப் படும் பொய்ச் செய்திகளை நம்பி மாணவர்கள் திசை மாறி விடக்கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175வது ஆண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்களின் கல்வியை பாதிக்கச் செய்ய பல சக்திகள் முயற்சிப்பதாகத் தெரிவித்தார். மாணவர்கள் வாட்ஸ் அப்பில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 175-வது ஆண்டிலும் பச்சையப்பன் கல்லூரி மாறாத தரத்துடன் இருக்கிறது என்று பெருமை பொங்கத் தெரிவித்தார். பச்சையப்பன் கல்லூரியில் படிப்பதும் பணி புரிவதும் பெருமை என்றார் அவர்.
இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.