நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, சென்ற வருடத்தைப் போல் இந்த வருடம், நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று சென்னையில் சிபிஎஸ்இ., அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னையில் சிபிஎஸ்சி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினரும் போலீசாரும் சாலையில் கட்டிப் புரண்டு சண்டையிட்டனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, அண்ணாநகர் திருமங்கலத்தில் உள்ள சிபிஎஸ்சி இயக்குனர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் கூடினர். அவர்களை முன்னேறிச் செல்லாமல் தடுக்க போலீஸார் தடுப்புகள் அமைத்திருந்தனர். ஆனால் அவர்கள் தடுப்புகளை மீறி சிபிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதை அடுத்து போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. அவர்களில் சிலருடன் போலீசார் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். பின்னர் போராட்டக்காரர்களை அப்படியே ஒட்டுமொத்தமாக வாகனத்தில் ஏற்றினர்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, உளவுப் பிரிவு அதிகாரிகள் தங்களை திட்டமிட்டு, தாக்கினர் என்று அவர்களில் சிலர் குற்றம் சாட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்ற வருடம் அனிதா மரணத்தை அடுத்து நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் அளவில் அரசியல் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வருடம் நீட் தேர்வு முடிந்த நிலையில், மாணவர் ஒருவரின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை அடுத்து போராட்டம் நடத்தப் பட்டது.