சென்னை: திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவும் அவருடைய கூட்டாளிகளும் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இருந்த போது போலீஸாரால் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ரவுடி ராக்கெட் ராஜா, வெங்கடேச பண்ணையாரின் வலது கரமாக செயல்பட்டவர்.
கடந்த 2003ஆம் ஆண்டில் சென்னையில் வெங்கடேச பண்ணையார் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பிறகு ராக்கெட் ராஜா தலைமறைவாக இருந்து வந்தார். இருந்தாலும் அவ்வப்போது நெல்லையில் மிரட்டல், கொலை முயற்சி ஆகியவற்றில் ஈடுபட்டு வந்ததாக போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதை அடுத்து நெல்லையில் போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போதெல்லாம் மும்பை அல்லது சென்னையில் ராக்கெட் ராஜா பதுங்கி தப்பி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், ராக்கெட் ராஜாவை குறிவைத்து போலீஸார் நெருங்கிய போது, அவர் தன்னை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல திட்டம் தீட்டி வருவதாக செய்தியாளர்களிடம் தொடர்புகொண்டு கூறியிருந்தார். இந்நிலையில் ராக்கெட் ராஜா சென்னையில் கைது செய்யப் பட்டுள்ளார்.