அடையாளம் தெரியாத நபர்கள் டீ கடைக்குள் புகுந்து கத்தியால் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர்.
சாகுல் ஹமீது என்பவர், திண்டுக்கல் யூசுப்பியா நகர் பகுதியில் தேனீர்க்கடை நடத்தி வருகிறார். அவருடன், மனைவி பரக்கத் நிஷா, தங்கை கொலுசா பீவி ஆகியோர் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல், கடையில் இருந்த மூன்று பேரையும் சரமாரியாக கத்தியால் குத்தியது. வழியில் தேனீர் அருந்தியபடி நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் பிரவீன் என்பவரையும் கழுத்தில் கத்தியால் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.
கத்திக் குத்தினால் காயமடைந்த நான்கு பேரையும், அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, சாகுல் ஹமீதின் மனைவி பரக்கத் நிஷா, தங்கை கொலுசா பீவி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கத்தியால் குத்திவிட்டு தப்பிய கும்பலை தேடி வருகின்றனர். இதனிடையே, சாகுல் ஹமீது மகன் ஷேக் பரீத்தின் மனைவி மதினா பேகம் கடந்த மாதம் உயிரிழந்தது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதினா பேகத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
சாகுல் ஹமீது குடும்பத்தினரே அவரைக் கொன்றிருக்க வேண்டும் என மதினா பேகத்தின் பெற்றோர் புகாரில் தெரிவித்திருப்பதும் தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட போது சாகுல் ஹமீது மகன் ஷேக் பரீத் கடையில் இல்லை.
இந்நிலையில், சாகுல் ஹமீது மருமகள் மதினா பேகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.




