நெல்லையில் உள்ள ம.தி.தா. ஹிந்து மேல்நிலைப்பள்ளியில் சாமி-2 படப்பிடிப்பு இன்று அதகளப்பட்டது. இதற்காக பள்ளி வளாகத்தில் பிரமாண்ட செட்கள் போடப்பட்டிருந்தன.
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சாமி 2’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘சாமி 2’ படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்ட விக்ரம், ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த கையோடு சாமி ஆடத்தொடங்கி விட்டார்.
ஆறுச்சாமி கதாபாத்திரத்துக்காக முழுமையாக மாறியுள்ளார் விக்ரம். சென்னையில் தொடங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து வட இந்தியாவில் சில முக்கிய காட்சிகளை படமாக்கிய படக்குழு, தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருக்கும் நெய்க்காரப்பட்டி கிராமத்தில் ஷூட்டிங்கை நடத்தியது. விக்ரம் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த செட்கள் போடப்பட்டன.
இப்படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராகவும், ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும் கலக்கும் இந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.