திருச்சியில் நிபா வைரஸ் தாக்குதலில் நோயாளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே நிபா வைரஸால் இளைஞர் பாதிக்கப்படவில்லை என திருச்சி மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம், மருங்காபுரி தாலுகாவில் உள்ள கார்வாடி கிராமத்திலிருந்து ஒரு மாதத்துக்கு முன் கேரளாவுக்கு சாலை போடும் பணிக்காகச் சென்ற சிலர், கடந்த மே 15 ஆம் தேதி தங்கள் கிராமத்துக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ராசு என்பவரின் மகன், 22 வயது பெரியசாமி நேற்று காலை உடல்நலம் குன்றிய நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த பெரியசாமி, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பெரியசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் நிபா வைரஸ் பாதித்துள்ளதாக சந்தேகித்தனர். இதனால் அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், கார்வாடி கிராமத்தில் கேரளாவில் இருந்து திரும்பிய மற்றவர்களுக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்திருக்குமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் ஏற்பட்டதால், கார்வாடி கிராமத்தில் மருத்துவ முகாம் ஒன்று நடத்த வேண்டும் என்று அப்பகுயினர் தாலுகா அலுவலகரிடம் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் நோயாளி பெரியசாமிக்கு நிபா வைரஸ் பாதிப்பில்லை என்றும் திருச்சியில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதா விளக்கம் அளித்துள்ளார். யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.




