சென்னை: தன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், உண்ணாவிரதம் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த தன்னை வலுக் கட்டாயமாக போலீசார் அழைத்துச் செல்வதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பண்ருட்டி வேல்முருகன் அண்மையில் விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டையில் சுங்கச்சாவடியை சூறையாடிய வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல் நலக் குறைவால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கைதிகளுக்கான வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதால், தேச துரோக வழக்கில் கடலுார் போலீசார் நேற்று வேல்முருகனை கைது செய்தனர்.
கடந்த ஏப்ரலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என மத்திய அரசைக் கண்டித்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதைத் தொடர்ந்து, அவர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, தாம் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், அதை எதிர்த்து மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.




