சென்னை: சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், அது சட்டப்படி செல்லும் என்றும் கூறியுள்ளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் அதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவும் சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.,. விஜயதாரணி கோரினார். இதற்கு பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது; ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டப்படி செல்லும் என்றார்.
திமுக., ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தொழிற்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் அளித்த பதிலுரை ஒன்றில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க முயற்சிக்கு 230 ஏக்கர் நிலத்தை வழங்கியதாகக் கூறியதை குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த உண்மை வெளியே தெரிந்துவிடக்கூடாது என திமுகவினர் அஞ்சுவதாகக் கூறினார். ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதில் அதிமுக அரசு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளதாகவும் கூறினார் முதல்வர்.
இந்நிலியில், இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம், உச்சநீதிமன்றத்தை நாடலாம் என கருதப் படுகிறது.
இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள கேவியட் மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை எதிர்த்து, வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தை அணுகினால் தங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றும், மாநில அரசின் கருத்துக்களை கேட்காமல் எந்த முடிவையும் மேற்கொள்ள கூடாது என்றும் கூறியுள்ளது.




