சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.
தூத்துக்குடிக்குச் சென்று துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் காயம் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்து ஆறுதல் கூறி வந்தார் ரஜினி. அப்போது இந்த வன்முறைக்கு சமூக விரோத இயக்கங்கள் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டதுதான் காரணம் என்று கூறினார்.
மேலும், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கோபமாகப் பேசிச் சென்றார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து நான் சொல்ல வேண்டியதில்லை என்றார். மேலும், போராட்டம் போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடு ஆயிடும் என்றார். இதனால் மக்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்தியதாக எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு கருத்துகளைத் தெரிவித்து வருவதுடன், போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை முதல் போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டின் முன்பும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
75க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஜினி வீடு அமைந்துள்ள தெரு முனையில் பலத்த சோதனைக்குப் பிறகே பொதுமக்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதித்து வருகின்றனர்.




