தமிழகம் ஓர் அமைதிப் பூங்கா என்று அடிக்கடி அரசியல்வாதிகள் மேடைகளில் மட்டுமே முழங்கி வந்த நிலையில், இப்போது அதுவும் கூட சொல்ல இயலாத அளவுக்கு கலவரக் காடாக மாற்றியிருக்கிறார்கள் தமிழகத்தை! தமிழகத்தை மக்களுக்காக தாங்கள் ஜனநாயக வழியில் போராடுவதாகச் சொல்லிக் கொண்டு வன்முறையை இளம் நெஞ்சங்களில் விதைத்து, வேலைவாய்ப்பின்மையையும் வறுமையையும் மட்டுமே இளைஞர்களுக்கு பரிசாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற, அரசியல் போர்வையில் இயங்கும் பிரிவினைவாத கைக்கூலித் தலைவர்களை கைது செய்ய ஐஜி தலைமையில் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியில் சாதாரண ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து, வடமாவட்டங்களில் வன்னியர் போராட்டங்களில் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருந்த பன்ருட்டி வேல்முருகன், இன்று தனித்து வந்து ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கி, வன்முறைப் போராட்டங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுவிட்டார். அண்மைக் கால தமிழக வன்முறைப் போராட்டங்களில் புதிய வரவாக நுழைந்த இவர், உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடி தாக்குதல் வழக்கில் கைதாகி, நெய்வேலியில் பேசிய தேசவிரோத பிரிவினை பேச்சுக்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.
இவர் போன்றவர்களுக்கு ஊக்க சக்தியாக, உந்து சக்தியாகத் திகழ்பவர் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ. பிரிவினைவாதப் பேச்சுகளின் பிறப்பிடமென வெளிநாட்டு நிதியுதவியுடன் நடத்தப் படும் கிறிஸ்துவ சர்ச்சுகள் அடையாளம் காட்டப் படுகின்றன. மேலும், தனித்தமிழ் எனப் பேசி நாட்டைக் கூறு போடும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடனான தொடர்பில் இருக்கும் சில இஸ்லாமிய பயங்கரவாத தொடர்பு உள்ளவர்களும் அண்மைக் கலவரங்களில் அடையாளம் காட்டப் பட்டுள்ளனர்.
மக்கள் போராட்டமாக முதலில் வடிவமைக்கப் பட்டு, பின்னர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களாக மாற்றம் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வரை, இந்த அமைப்புகளின் கைவரிசை குறித்து உளவுத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் சில போராட்டங்கள் அண்மைக் காலமாக வடிவமைக்கப் பட்டு வந்துள்ளன. மத்திய பாஜக அரசும், மாநில அரசும் தமிழர்களுக்கு எதிரான, குறிப்பாக விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாக பிரசாரம் செய்யப் படுகிறது. விவசாய நிலங்களுக்கும் எதிரான திட்டங்களான நியூட்ரினோ, ஒஎன்ஜிசி, கெயில், அணுஉலை போன்ற திட்டங்கள் பிரசாரம் செய்யப் படுகின்றன. தற்போது, காடுகள் மலைகள் விவசாய நிலங்களை அழித்து, இயற்கைக்கு எதிரான நீர் நிலை ஆதாரங்களை முற்றிலுமாக பாதிக்கக்கூடியதாக, சேலம்-சென்னை 8வழிச் சாலை திட்டம் அமையவுள்ளதாக, இந்த அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
இவை போன்ற திட்டங்களை தமிழகத்தில் தடுத்து, வேலைவாய்ப்பின்மையை அதிகப்படுத்தி, இளைஞர்களை தீவிரவாத கொள்கைகளுக்கு திசை திருப்பிவிடும் சீரிய முயற்சியில் நக்சல்கள் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இதை அடுத்து இத்தகைய போராட்டங்களின் பின்னணியை ஆராய்ந்து, சதித்திட்டம் தீட்டி, செயல்படுத்த முனையும் அமைப்புகளின் தலைவர்களை ஒடுக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் இணைந்து களம் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 18 தலைவர்கள் இவ்வாறு கட்டம் கட்டப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கென, ஐஜி தலைமையில் தனிப்பட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செயல்படும் அமைப்புகளின் தலைவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட உடனடியாக ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மாற்றுவழியையும் தீவிர போராட்டங்களையும் இந்த அமைப்புகள் ஆலோசித்து வருகின்றனவாம்!




