சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது உள்ளிட்ட பிரச்னைகளை உடனடியாக பேசித் தீர்க்காவிட்டால், வரும் 19ஆம் தேதி அல்லது அதற்கு பின்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தொமுச அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் 10 முக்கிய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் பணத்தை உரிய கணக்கில் செலுத்தாமல், தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்தி வருகின்றன என்றும், ரூ.5 ஆயிரம் கோடியாக இருந்த பாக்கித் தொகை, ரூ.6 ஆயிரம் கோடியை நெருங்கி வருவதாகவும் கூறப்பட்டது.
மேலும் 13ஆவது ஊதிய ஒப்பந்தப் படி வழங்க வேண்டிய அனைத்து அலவன்ஸ்களையும் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதியிட்டு வழங்க வேண்டும் என்றும், இதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கான பண பலன்களை நிலுவை வைக்காமல் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இவை உள்ளிட்ட 7 தீர்மானங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக தங்களை அழைத்துப் பேசி பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், வரும் 19 அல்லது அதற்கு பின்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.




