கேரள மாநிலம் புனலூரில் நடந்த செங்கோட்டை -புனலூர் அகல ரயில் பாதை அர்ப்பணிப்பு விழாவில் தமிழக எம்பி.,க்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த விழாவில் செங்கோட்டை – புனலூர் அகல ரயில் பாதையை அதிகாரபூர்வமாக போக்குவரத்துக்கு அர்ப்பணித்து வைத்தார் ரயில்வே துறை இணை அமைச்சர்.
இந்த விழாவின் போது கேரளாவைச் சார்ந்த மத்திய சுற்றுலாத் துறை அமைச்சரின் கோரிக்கைகயை ஏற்று ரயில்வே இணை அமைச்சர் திருவனந்தபுரம் – பெங்களுர் புதிய ரயில் வெகு விரைவில் இயக்கப்படும் என்று அறிவித்தார்.
அது போல், ஏற்கெனவே விடப்பட்டு நின்று போன செங்கோட்டை – தாம்பரம் அந்த்யோதயா ரயில் உள்ளிட்ட புதிய ரயில்களை நம் மாநில மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுப் பெற்று, சென்னையில் நடைபெற்ற விழாவில் அறிவிக்க வைப்பார் என்று நெல்லை, குமரி மாவட்ட ரயில் பயணிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவ்வாறு எதுவும் அறிவிக்கப் படவில்லை. குறைந்த பட்சம், ஏற்கெனவே உள்ள ரயில் நீட்டிப்பையாவது அறிவித்திருக்கலாம். இது, கேரள, தமிழக எம்.பி.க்களுக்கு இடையேயான நிர்வாக விவரங்களில் உள்ள அனுபவத்தைக் காட்டுவதாக பயணிகள் குறைப்பட்டுக் கொள்கின்றனர்.
முன்னதாக, தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு ரயில் விடப்பட்ட போது, முதல்நாள் ரயிலை வரவேற்க கொல்லத்தில் இருந்து கேரள எம்.பி.க்கள் செங்கோட்டைக்கு வந்திருந்தனர். அப்போது தமிழக எம்.பி.க்கள் எவரும் செங்கோட்டைக்கு வரவில்லை. இந்நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் கலந்து கொண்ட இன்றைய நிகழ்ச்சியில் தமிழக எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர்.




