சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் வெய்யில் வாட்டி வருகிறது.
கோடைக்காலத்தைப் போல், அனல் காற்று வீசி வருவதால், மக்கள் பெரிதும் சிரமப் படுகின்றனர். குறிப்பாக வட மாவட்டங்களில் நிலவும் வெப்ப நிலை, மக்களை பெரிதும் வாட்டி வருகிறது. இரவு நேரத்திலும் வெப்பக் காற்று வீசி வருகிறது. இந்நிலையில், அடுத்த இரு நாட்களும் வெய்யிலின் தாக்கம் வட மாவட்டங்களில் இருக்கும் என்றும் வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகமாக இருக்கும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 103.28 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 102.74 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. தற்போது தமிழகம் முழுவதும் ஆங்காங்கு லேசான மழை பெய்து வருகிறது.
கலவை 2 செ.மீ, எண்ணூர், வால்பாறை, பரங்கிப்பேட்டை, சின்னக்கல்லாறு, நெய்வேலி ஆகிய இடங்களில் 1 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது.




