சென்னை : பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறுக் கருத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த குற்றத்துக்காக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகரும், போலீஸார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய வழக்கில் நாம் தமிழர் சீமானும் இன்று காலை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.
ஐ.பி.எல். போட்டியின் போது போலீஸ் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று காலை சீமான் ஆஜரானார். சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கிய நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார்.
நேரடியாக ஆஜராகாமல், முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்து நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்ட நிலையில் இருந்து வந்த எஸ்.வி.சேகர், எழும்பூர் நீதிமன்றம் ஆஜராகுமாறு பிறப்பித்த உத்தரவின் பேரில் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
முன்னதாக, பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டது தொடர்பான வழக்கில் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து எஸ்.வி. சேகர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இந்நிலையில், எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், இன்று காலை எழும்பூர் நீதிமன்ற வளாகம் பெரும் பரபரப்புடன் திகழ்ந்தது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப் பட்டுள்ளனர்.




