சென்னை: ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறினார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதல்வர் பதில் அளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் நக்சலைட் ஊடுருவல்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவாமல் இருக்கவும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார் முதல்வர்.
தமிழகத்தில் பொது அமைதியை பராமரிப்பதில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று கூறிய அவர், கொள்ளையர்கள், வழிப்பறி செய்வோர், கடத்தல்காரர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தை அமைதி பூங்காவாக, காவல்துறையினர் காத்து வருகின்றனர் என்று கூறிய அவர், இந்திய அளவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்களின் சதவீதம் குறைவாக உள்ளது என்றார்.
காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து வருகிறது என்பதைக் குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிச்சாமி இந்தாண்டு காவல்துறைக்கு ரு.7,877 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும், காவல் துறைக்கு கடந்த 7 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.




