மதுவையும் ஊழலையும் ஒழிப்பதே பாமகவின் லட்சியம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்
காஞ்சிபுரம் போராட்டத்தில் அவர் பேசியது…
தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் காஞ்சிபுரம் வ்ணிகர் வீதியில் இன்று மாலை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பெண்கள் உட்பட பல்லாயிரக்கனோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பா.ம.க. முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளரும் தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு பங்கேற்று கண்டன உரையாற்றினார். அவரது உரை விவரம்:
தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது மது தான். இந்தியாவின் மதுவால் ஆண்டு தோறும் 18 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் மதுவால் இறக்கின்றனர். புற்றுநோயால் இறப்பவர்களைவிட மதுவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் மது விற்பனையாகிறது. அதிக தற்கொலைகள், அதிக சாலைவிபத்துக்கள், அதிக பாலியல் வன்கொடுமைகள் நடைபெறும் மாநிலம் தமிழகம் தான்.
தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் இளம் விதவைகள் உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் மது தான். முன்பெல்லாம் 30 வயதில் தான் மது அருந்தத் தொடங்குவார்கள். இப்போது 12 வயது குழந்தைகள் கூட மது அருந்துகின்றன. இதைப் பற்றியெல்லாம் தமிழக ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை. அவர்களின் கவலை எல்லாம் பணம் தான்.
தமிழ்நாட்டில் மக்களுக்கு மதுவைக் கொடுக்கிறார்கள் என்று கூட கூறமுடியாது. மதுவை திணிக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். தமிழகத்தில் கல்வி, விவசாயம் என மக்கள் நலனுக்கான துறைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக மதுவுக்கு மட்டும் தான் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி, 35 ஆயிரம் கோடி என இலக்கு வைத்து மது விற்பனை செய்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மது தனியாரிடம் இருந்தது; கல்வி அரசிடம் இருந்தது. ஆனால், இப்போது மதுவை அரசு விற்கிறது. கல்வியை தனியார்கள் கடைசரக்கு போல விற்கிறார்கள். உலகில் எங்கும் இந்த அவலம் கிடையாது. தமிழகத்தில் மட்டும் தான் இந்த அவலம் காணப்படுகிறது.
1971 ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் மதுவிலக்கு நீக்கப்பட்டு சாராயக்கடைகள் திறக்கப்பட்டன. இப்போது தெருவெல்லாம் மது ஆறாக ஓடுகிறது. பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்கள் கூட குடித்து விட்டு தான் செல்வதாக செய்திகள் கூறுகின்றன. 2016 ஆம் ஆண்டில் பா.ம.க.ஆட்சிக்கு வந்தவுடன் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் மது விலக்கை ஏற்படுத்த நம்மால் தான் முடியும். நம்மால் மட்டும் தான் இந்த வாக்குறுதியை வழங்க முடியும். மதுவின் தீமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் கதறுகிறார்கள். பெண்களின் தலையெழுத்தை மாற்ற நம்மால் தான் முடியும். தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி; மதுவிலக்கு வருவதும் உறுதி.
மதுவுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. மதுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூடியது. அடுத்தகட்டமாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும். இந்தியாவில் தனி நபர் மது நுகர்வு அதிகமுள்ள மாநிலம் கேரளம் தான். ஆனால், அங்குள்ள மக்களின் நலன் கருதி அனைத்து பார்களையும் கேரள அரசு மூடியிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அனைத்து மதுக்கடைகள் மூடப்படவுள்ளன. கேரளத்தின் இந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.அதேபோல் தமிழகத்தில் மதுவிலக்கை ஏற்படுத்த தமிழக ஆட்சியாளர்களுக்கு துணிச்சல் உண்டா?
தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அரசுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. நல்ல அரசுக்கு இலக்கணம் என்னவென்றால் கல்வி, சுகாதாரம், சிறுதொழில் உள்ளிட்ட துறைகளில் மாநிலத்தை முன்னேற்றுவது தான். இந்த அரசுக்கு இதில் அக்கறை இல்லை. ஊழலையும், மதுவையும் ஒழிப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் லட்சியம் ஆகும். அடுத்த ஆண்டு தேர்தலில் பா.ம.க. ஆட்சிக்கு வந்து இதை சாதிக்கும். இந்த இலக்குகளை எட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறைக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு பேசினார்.