விழுப்புரத்தில் இயங்கும் தனியார் விவசாய இடுபொருள் நிறுவனத்தின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 33 ஆயிரத்தை கொள்ளை அடித்து செல்லும் 17 வயது சிறுவனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் இளந்திருமாறன் என்பவர் தனியார் விவசாய இடுபொருள் நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த 15 ஆம் தேதி நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற அவர் அதிகாலை நிறுவனத்தை திறக்க வந்தபோது நிறுவனத்தின் முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 33 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து இளந்திருமாறம் தாலுக்கா காவல் நிலையதில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் வினாயகமுருகன் வழக்கு பதிவு செய்து அப்பகுதியிலுள்ள சிசி டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அந்த காட்சிகளில் 17 வயது மதிக்க தக்க சிறுவன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் கொள்ளையில் ஈடுபட்டது விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதால் போலீசார் இந்திரா நகரில் இருந்த சிறுவனை கைது செய்து கொள்ளை அடித்த பணத்தை அவனிடமிருந்து மீட்டனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் மீது பல திருட்டு வழக்குகள் விழுப்புரத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
பணம் திருடுபோன 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.