வேலூர் மாவட்டம், சோளிங்கர் காளிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் சுனில்(11). இவன் அங்குள்ள அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 25ம் தேதி இரவு தனது பெற்றோருடன் வீட்டின் வெளியே வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். நள்ளிரவு ஒரு மணியளவில் சுமார் 8 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்று சுனிலை கடித்தது. ஏதோ கடிப்பதை உணர்ந்து எழுந்த சுனில் வலியால் கதறி அழுதான்.
பதறியடித்து எழுந்த பெற்றோர் பார்த்த போது அங்கு பாம்பு நெளிந்து சென்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த பாம்பை அடித்துக் கொன்றனர்.
அதற்குள் சுனில் சுயநினைவை இழந்து விழுந்தான். உடனடியாக அந்த பாம்பை ஒரு பையில் போட்டுக்கொண்டு, சுனிலுடன் பைக்கில் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவன் சுனிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், அதற்குள் சிறுவன் சுனிலுக்கு ரத்தம் உறைந்து ஆபத்தான கட்டத்தை எட்டினான். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு மணி நேரத்தில் அழைத்து வந்து அதிகாலை 3.30 மணியளவில் அனுமதித்தனர்.
அங்கு குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவர் குழுவினர் சுனிலுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 2 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர்/சிறுவன் அபாயக்கட்டத்தை தாண்டி நினைவு திரும்பி தனது பெற்றோரிடம் பேசினான். இதை பார்த்த பெற்றோர் கண்ணீருடன் தங்கள் மகனை பிழைக்க வைத்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.




