மலர்ந்தே தீரும் மலர்ந்தே தீரும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அடித்துக் கூறிய தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், இதே தமிழகத்தில் கம் பேக் மோடி என கூறும் காலம் வரும் என்றார்.
மதுரை அண்ணா நகரில் பாஜக., பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு திமுக., பாமக., கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், 2003ஆம் ஆண்டிலேயே தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அதனால் வேறு எந்தக் கட்சியும் இதை சொந்தம் கொண்டாட முடியாது என்றார்.
திமுக., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், வெற்று கருப்பு பலூன்களை பறக்க விட்டுக் கொண்டிருக்கும் போது, மோடி இங்கே விமானத்தைப் பறக்க விடுகிறார். ‘Go Back Modi’ என சொன்ன தமிழகம் ‘Come Back Modi’ என சொல்லும் காலம் விரைவில் வரும் என்றார்.
சட்டசபைக்கு ஸ்டாலின் கிழிந்த சட்டை அல்லது கறுப்பு சட்டையுடன் மட்டுமே செல்வார் என்றும், தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை மூடுவதே கம்யூனிஸ்ட்களின் வேலை என்றும் கூறிய டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை என தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசினார்.




