கோவையில் கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி மாடியில் இருந்து விழச் செய்த போது உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில், பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது, 2ஆம் ஆண்டு மாணவி லோகேஸ்வரி, போலி பயிற்சியாளரால் தள்ளிவிடப்பட்டு உயிரிழந்தார். இதை அடுத்து போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்த போலீசார், அவருடன் இருந்த மேலும் 3 பேரை பிடித்தனர். அவர்களுக்கு போலி ஆவணம் தயாரித்துக் கொடுத்த ஈரோட்டைச் சேர்ந்த அசோக், தனியார் கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கு மார்க்கெட்டிங் செய்து உதவிய தாமோதரன் என்பவரையும் சேர்த்து மொத்தம் 5 பேரிடம் ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆறுமுகத்தின் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தியபிறகு இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆறுமுகத்தை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். பின்னர் அவ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனு திங்கள் கிழமை விசாரிக்கப்படுகிறது.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்காக, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம், பயிற்சியாளருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக்கூறி அவர் ஒரு போலி பயிற்சியாளர் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. மேலும் பல்வேறு கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சிக்காக அவர் 2.5 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.




