சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலமின்றி ஓய்வு எடுத்து வருகிறார். அண்மைக் காலமாக அவருக்கு உடல் நலம் மோசமான நிலையில், கடந்த வாரம் டிராக்யாஸ்டமி சிகிச்சையில் மாற்றுக் கருவி பொருத்தி வீடு திரும்பினார்.
இந்நிலையில், அவரது இதயம் மட்டுமே இயங்குவதாகவும் மற்ற உறுப்புகள் செயலிழந்து விட்டன என்றும் காலை முதல் வதந்தி பரப்பப் பட்டு வந்தது. சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் இது போன்று பரவிய செய்திகளால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் இதே செய்தியைப் பகிர்ந்து கொண்டு, என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, கருணாநிதியின் மகனும் திமுக., செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்துக்கு விரைந்தார். அங்கே கருணாநிதியை சந்தித்துவிட்டு, வெளியில் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், கருணாநிதி உடல் நலம் குறித்து வதந்தி பரப்பப் படுகின்றது. அவருக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். யாரும் அச்சப் படும் அளவுக்கு அவரது உடல் நிலை மோசமாக இல்லை என்று கூறினார்.




