சென்னை: மாணவர்கள் ரூ.2 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி, பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சென்னை எஸ் எஸ் எம்., பள்ளி மாணவர்களின் பெற்றோரைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அந்தத் தாளாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் எஸ்.எஸ்.எம் பள்ளி மாணவர்களின் பெற்றோர் அமைச்சரைச் சந்தித்து தங்கள் புகார்களைத் தெரிவித்தனர். அப்போது அவரிடம், தங்கள் குழந்தைகளிடம் தங்களைப் பிச்சைக்காரர்கள் என்றும், பணம் கட்டக் கையாலாகாதவர்கள் என்றும் பள்ளி நிர்வாகிகள் பேசினர் என்று கூறினர். இதையடுத்து, அந்தப் பள்ளியின் மீது எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்யவும், காஞ்சிபுரம் ஆட்சியர் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டு தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார். மேலும், பள்ளியை மூடாமல் தொடர்ந்து நடத்த தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். இதனை அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதனிடையே பள்ளிக்கு காவலர்கள் சென்றபோது, அவர்கள் வருவதை அறிந்த தாளாளர் சந்தானம் பின்புற வாசல் வழியாக தப்பிச் சென்றதாகவும், அவரை வாகனத்தின் துரத்திய போலீஸார் மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது.





