மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக.,எம்எல்ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 69.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவேல் மரணமடைந்ததால், இடைத் தேர்தல் வந்தது. அதில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று இரவு போஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை கைகொடுக்காமல் போஸ் மரணமடைந்தார்.
ஏ.கே. போஸ். எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக.,காரர். 2006, 2011 சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டுமுறை எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். டிராவல்ஸ் நிறுவன அதிபரான ஏ.கே.போஸ், ஓர் அமைதியான அரசியல்வாதி. அடாவடிகளில் ஈடுபடாதவர் என்பதால் பலருக்கும் அவரைத் தெரியாது.
ஏ.கே.போஸின் தந்தை பெயர் கருப்பத்தேவர். ஏ.கே.போஸ் 2006ல் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2007ல் சட்டசபையில் நடைபெற்ற அமளி துமளியில் தொப்பியை அவைத்தலைவர் மேஜை மீது வீசி பத்து நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் மூலம், ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார். 2011ல் திருப்பரங்குன்றம் தொகுதி கூட்டணிக் கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டது. எனவே போஸ் தொகுதி மாறி மதுரை வடக்கில் போட்டியிட்டு வென்றார். 2016 சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வடக்குத் தொகுதியில் போட்டியிட மனு அளித்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அதில் வெற்றி பெற்றார்.
சட்டப் பேரவையில் அதிமுக., உறுப்பினர்கள் பிளவுபட்டு நின்றபோது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,வாக எண்ணும் படி, தேனியில் நடந்த திருமண விழாவில் தினகரனை சந்தித்து, அவருக்கு ஆதரவாகப் பேசினார். அதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த போது, அதே நேரத்தில் நிகழ்ச்சியை முடித்து விட்டு மதுரை திரும்பி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரை ஒரு ஹோட்டலில் சந்தித்துப் பேசினா். பின் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்த போது, முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணியில்தான் இருக்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்போது திருப்பரங்குன்றம் தொகுதி இரண்டாவது முறையாக காலி ஆகியுள்ளது.




