சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் இருக்கிறது. முக்கிய இடங்கள், கட்சி அலுவலகங்கள், தலைவர்கள் சிலைகள் மற்றும் தலைவர்கள் இல்லங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப் படுத்தியுள்ளனர்!
இதனிடையே காவேரி மருத்துவமனை முன்னர் திடீரென சன் டிவி.,,க்குச் சொந்தமான கார் ஒன்றை திமுக., தொண்டர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு எழுந்தது.
காவேரி மருத்துவமனையில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு காவேரி மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். மேலும், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஏராளமான காவலர்கள் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுதும் அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டுள்ளன. அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப் பட்டுள்ளதால் சென்னையில் பரபரப்பு கூடியுள்ளது.