திருப்போரூரில் இன்று காலை கழக செயல்வீரர் கலைச்செல்வனுக்கு சொந்தமான “புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் டீக்கடையில் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தேநீர் அருந்தும் காட்சி. கலைச்செல்வன் தம்பதியினரின் ஓபிஎஸ் அவர்களுக்கு சமயபுரம் மாரியம்மன் படத்தை வழங்கினர்… என்று தனது பேஸ்புக் பக்கத்தி பதிவிட்டிருந்தார் அதிமுக., எம்.பி. மைத்ரேயன்! மேலும், டீக்கடையில் ஓபிஎஸ்., டீ குடிக்கும் படத்தையும் போட்டு வாழ்த்தியிருந்தார்.
இது குறித்து விவரம் கேட்டபோது, மாமல்லபுரம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் யஸ்வந்த்ராவின் அண்ணன் மகன் திருமணத்துக்காக இன்று திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு வந்துள்ளார் துணை முதல்வர் ஓபிஎஸ். அப்போது, கோயிலுக்கு வெளிப்புறத்தில் கலைச்செல்வன் என்பவர் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கலைச்செல்வனின் தந்தை தொடங்கிய இந்த டீக்கடை ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் டீக்கடை’ என்ற பெயரில் கடந்த 50 வருடங்களாக உள்ளதாம்.
ஓபிஎஸ்., திருப்போரூர் வரும் தகவலை அறிந்த கலைச்செல்வம், அவரை வரவேற்கும் விதமாகச் சிவப்பு கம்பளம் விரித்து வைத்தார். அவ்வழியாக வந்த ஓபிஎஸ்ஸுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, ‘நான் ஒரு கல்யாணத்துக்குச் செல்கிறேன். திரும்ப வரும்போது உங்கள் டீக்கடைக்கு நிச்சயம் வருகிறேன்’ என்று கூறியுள்ளார். திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பி வரும்போது, அந்த டீக்கடைக்கு வந்தார் ஓபிஎஸ்.
அப்போது ஓபிஎஸ்.,க்கு கலைச்செல்வன் டீ கொண்டுவந்து கொடுத்தார். கையில் வாங்கிய ஓபிஎஸ்., ‘மாட்டுப்பாலா… பாக்கெட் பாலா?’ என்று கேட்டார். அவரும் ‘மாட்டுப்பால்’ என்ரார்.
‘பாய்லரா… கேஸ் வெச்சிருக்கீங்களா?’ என்று கேட்ட ஓபிஎஸ்ஸிடம், பாய்லர்லதான் என்றார் கலைச்செல்வன். ‘பழைமை மாறாம அப்படியே இருக்கீங்க. இதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க…’ என்றார் ஓபிஎஸ்., சிலிர்ப்புடன்!




