செங்கோட்டை: மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ரயில்பாதை சீரமைப்புப் பணிகள் முடிந்து கேரளவுக்கு இன்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரப் பகுதியில் இருந்து மலையில் ஏறி மலைக்கு மறுபுறம் இருக்கும் கேரளாவுக்குச் செல்லும், இரு மாநில போக்குவரத்து ரயில் சேவையில் செங்கோட்டை -கொல்லம் பயணம் மிகவும் முக்கியமானதாகும்.
கொல்லம் செங்கோட்டை அகல ரயில் பாதையில் செங்கோட்டை புனலூர்
இடையேயான அகல ரயில் பாதை பணிகள் சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்று இந்தாண்டு துவக்கத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்ட பின் இந்த வழித் தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தடத்தில் புளியரை முதல் தென்மலை வரையிலான பகுதி அடர்ந்த வனப் பகுதி! கடினமான பாறைகள் நிறைந்த பகுதி! அண்மையில்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு, தற்போது தினமும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கொல்லம் – திருநெல்வேலி பயணிகள் ரயில் இந்தத் தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் கேரளத்தில் 50 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால், இந்த தடத்தில் கடந்த 15ஆம் தேதி நியூ ஆரியங்காவு, கழுதுருட்டி, எம்.எஸ்.எல்.தென்மலை உள்ளிட்ட 8 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான பகுதிகளில் கடினமான பாறைகள் ரயில்தடத்தில் சரிந்து விழுந்தன.
குறிப்பாக தென்மலை குகை முன்பு மிகப் பெரிய பாறாங்கல் சரிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து தென்னக ரயில்வே அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு தற்காலிகமாக ரயில் சேவையை நிறுத்தி வைத்தனர். இதனால் இரு மாநில வர்த்தக சேவை முற்றிலும் தடைபட்டது. இதனால் இரு மாநில வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
தொடந்து இரவு பகலாக இந்தத் தடத்தில் மண்சரிவை சீரமைக்கும் பணிகளை ரயில்வே பணியாளர்கள் மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் பணிகள் நிறைவு பெற்றன. இதைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி செங்கோட்டை-புனலூர் தடத்தில் ரயில் எஞ்சினை இயக்கி ரயில்வே அதிகாரிகள் முதல் கட்ட சோதனைகளை நடத்தினர்.
அதன் பின் இரண்டாம் கட்டமாக தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட பாதுகாப்பு அதிகாரி மனோகரன் தலைமையிலான குழு, இருப்பு பாதையில் ட்ராலி மூலம் ஆய்வு நடத்தி ஆய்வு அறிக்கை சமர்ப் பித்தது.
தொடந்து மக்களின் நலன் கருதி நேற்றிரவு சென்னை தாம்பரத்திலிருந்து கொல்லம் நோக்கி தாம்பரம் ரயில்சேவை துவங்கியது. அந்த ரயிலானது இன்று காலை 6 மணிக்கு செங்கோட்டை வந்தடைந்தது. அதன் பின் கொல்லதிற்கு 10.30க்கு சென்றடைந்தது. இதனால் கடந்த 16 நாட்களாக நிறுத்தப்பட்ட ரயில் சேவை துவங்கியது. இதை அடுத்து இரு மாநில வியாபாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




