சென்னை: மாவோயிஸ்ட்கள் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 5 பேர் கைது விவகாரத்தில், முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹரிபரந்தாமன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று மதியம் அளித்த பேட்டியில், “நகர மாவோயிஸ்டுகள்” என்று குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்ட சுதாபரத்வாஜ், கவிஞர் வரவரராவ், வெர்னான் கான்சால்வ்ஸ், அருண் பரேரா மற்றும் கவுதம் நவ்லாகா ஆகிய 5 பேரும் உச்ச நீதிமன்ற தலையீட்டால் சிறையில் அடைக்கப் படாமல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வருகிற 6ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது. நீதிமன்றம் நியாயம் வழங்கும் என்ன நம்பிக்கை உள்ளது.
31.12.17 அன்று பீமாகோர்கான் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக 8 மாதம் கழித்து ” உபா”சட்டத்தை பயன்படுத்தியுள்ளார்கள். இது ஒரு அரசியல் நடவடிக்கை, வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயக குரல் வளையை நெரிக்கும் ‘உபா’ சட்டத்தை திரும்பப்பெற நாடு முழுவதும் குரல் எழுந்துள்ளது. இந்த குரல் இன்னும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலும் திருமுருகன் காந்தி, வழக்கறிஞர் முருகன் ஆகியோரை இச்சட்டத்தில் கைது செய்துள்ளனர். திருமுருகன் காந்தியை மாஜிஸ்திரேட் பிரகாஷ் சிறைக்கு அனுப்ப மறுத்துள்ளார். உடனே வேறு வழக்கை காட்டியுள்ளனர். அவர் மீது 40 வழக்குகள் போட்டு வைத்திருக்கிறார்கள். தூத்துக்குடியிலும் ஒரு எப்.ஐ.ஆரை 100 எப்.ஐ.ஆராக மாற்றி வைத்துள்ளார்கள்.
மக்களுக்காக பாடுபடும் சமூக ஆர்வலர்களை பாதுகாக்க நீதிமன்றங்கள் இயன்ற அளவுக்கு செயல்படுகின்றன.ஆனால் இப்பணியை ஊடகங்களும் மக்களாலும் மட்டுமே நிறைவாகச் செய்யமுடியும் என்றார் முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன்.
சமூக விரோதிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு வெளியில் இவர்கள் இப்படி பேட்டி அளிப்பதும், செயல்படுவதும் சமூக ஆர்வலர்களிடையே ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் இரு சமூகங்களுக்கு இடையே திட்டமிட்ட வகையில் கொந்தளிப்பை ஏற்படுத்தி பெருமளவு கலவரம் ஏற்படக் காரணமானவர்கள் என்று, சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய போலீஸார் சுட்டிக் காட்டும் போது, நீதித்துறை சார்ந்தவர்கள் இது போன்ற பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறுவதும், ஆதரவாக பொது வெளியில் செயல்படுவதும் பொதுமக்களிடையே நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
வழக்கு நீதிமன்றத்துக்கு வரும் போது வழக்கின் தன்மைக்கு ஏற்ப முடிவு எடுப்பதை விட்டுவிட்டு, பத்திரிகையாளர்களை சந்தித்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிபதிகள் பேசுவது, இதே போன்ற வழக்கு இவர்கள் முன் வந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், இது போல் ஆதரவாகப் பேசுபவர்களின் பின்னணியும் உள்நோக்கமும் கூட நன்றாக வெளித் தெரிந்து விடுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். குறிபாக, முன்னள் நீதிபதிகளின் இத்தகைய செயல்பாடுகள், இவர்கள் நீதிபதிகளாக இருந்த காலத்தில் எத்தகைய சார்புத் தன்மையுடன் தீர்ப்புகளை வழங்கியிருப்பார்கள் என்ற சந்தேகத்தையும் தூண்டுவதாக அமைந்துவிடுகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




