சென்னை: திருத்தப்பட்ட ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டினை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்த பின்னர், டூப்ளிகேட் எனப்படும் மாற்று கார்டுக்கு பதில், இணைய தளத்தில் ஆவணமாக பதிவிறக்கம் செய்யும் வசதியை உணவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் ஆதார் விவரங்கள் அடிப்படையில், தமிழகத்தில் கையடக்க வடிவில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அதில் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை செய்த பின், அரசு ‘இ – சேவை’ மையங்களில், மாற்று கார்டுகளை வாங்கிக் கொள்ளும் வசதி இருந்தது. இதற்கு 30 ரூபாய் கட்டணம்.
ஆனால், சேவை மைய ஊழியர்கள், கூடுதல் பணம் வசூல் செய்வது, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் கார்டுகளை அச்சிட்டு தருவது என முறைகேடுகளில் ஈடுபட்டனர். இதனால் அந்த மையங்களில், மாற்று ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதை சில மாதங்களுக்கு முன் உணவுத்துறை நிறுத்தியது.
இந்நிலையில் ஸ்மார்ட் கார்டுகளில் பிழை திருத்தங்கள் செய்வோர், மாற்று கார்டுகளை வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறிபோது… பொது வினியோக திட்ட இணையதளம், ‘மொபைல் ஆப்’ செயலியில் கார்டுதாரர்கள், திருத்தங்கள் செய்யும் முன், பதிவு செய்த மொபைல் போன் எண்ணை குறிப்பிட வேண்டும். பின் அந்த எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவிட்டு, விரும்பிய திருத்தங்களை செய்யலாம்.
பின் அந்த விவரம், மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும். அதை இணையதளம் வாயிலாகவே வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் ஆய்வு செய்து ஒப்புதல் தருவர்.
தவறான விவரங்கள் இருந்தால் நிராகரிப்பர். அந்த விவரமும் எஸ்.எம்.எஸ்.,சில் அனுப்பப்படும். அதிகாரி ஒப்புதல் அளித்த ஒரு வாரத்திற்குள் சரி செய்த விவரங்கள் இணைய தளத்தில், பி.டி.எப்., ஆவண வடிவத்தில் இருக்கும். அதை, ‘பிரின்ட்’ எடுத்து, ரேஷன் கார்டு கேட்கும் இடங்களில் சமர்ப்பிக்கலாம்.
அரசு ஒப்புதல் கிடைத்ததும் ஏற்கெனவே இருந்தது போல் மாற்று கார்டுகள் வழங்கப்படும் என்று கூறினார். https://www.tnpds.gov.in/




