வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து மூதாட்டி கொலை: நகை கொள்ளை

சென்னை: சென்னை, அம்பத்தூரில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து, மூதாட்டியைக் கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் பிரகாஷ் நகர் பாண்டியன் தெருவைச் சேர்ந்த குருநாதன் மனைவி நிர்மலா(65). இவர்களது வீட்டின் மாடியில் வீடு காலியாக இருந்தது. இந்த நிலையில் தம்பதியிடம் செவ்வாய்க்கிழமை மதியம், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், காலியாக உள்ள வீட்டைப் பார்க்க வந்ததாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய குருநாதன், மாடியிலுள்ள வீட்டைத் திறந்து காட்டும்படி நிர்மலாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து முதல் மாடிக்கு நிர்மலா அழைத்துச் சென்றார். பின்னர் திரும்பவில்லை. இதனிடையே வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிர்மலாவின் மகன் அவரைத் தேடி மாடிக்குச் சென்றார். அப்போது, நிர்மலா இறந்து கிடந்தது தெரியவந்தது. வீட்டைப் பார்ப்பது போல் உள்ளே சென்ற மர்ம நபர், நிர்மலாவின் கழுத்தை நெரித்துக் கொன்று, அவர் அணிந்திருந்த 9 பவுன் நகையை கொள்ளை அடித்து தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடிவருகின்றனர்.