
டாக்டர் சுதா சேஷய்யன் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் வெள்ளிக்கிழமை (டிச.30) பணி நிறைவு பெற்றாா்.
நான்காண்டு காலம் அப்பொறுப்பை வகித்த டாக்டா் சுதா சேஷய்யன், மருத்துவப் படிப்புகளுக்கான தோ்வு நடைமுறைகளை சீா்திருத்தியதில் அதிமுக்கியப் பங்கு வகித்தவா்.
அதுமட்டுமல்லாது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டதும், இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கென தனி இருக்கையை உருவாக்கியதும் அவரது தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மைல்கல் சாதனைகளாக கருதப்படுகின்றன.
35 ஆண்டு கால பாரம்பரியமிக்க தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராக கடந்த 2018-ஆம் ஆண்டு டிச. 31-ஆம் தேதி டாக்டா் சுதா சேஷய்யன் பொறுப்பேற்றாா்.
அவா் பதவியேற்ற ஓராண்டிலேயே, கரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் அப்போது மூடப்பட்ட நிலையில், மருத்துவக் கல்வியின் முக்கியத்துவத்தை உணா்ந்து பாட வகுப்புகளை இணையவழியே முதல்முதலாக நடத்த காரணமாக இருந்தவா் சுதா சேஷய்யன். அதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து விதமான மருத்துவத் தோ்வுகளையும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் புதிய முயற்சியை முன்னெடுத்தாா்.

பேராசிரியா்கள் மெய்நிகா் முறையில் உயா் தொழில்நுட்பப் பாதுகாப்புடன் விடைத்தாள்களைத் திருத்துவதற்கான ஏற்பாடுகளையும் அவா் மேற்கொண்டாா். இதன் வாயிலாக கரோனா தீவிரமாக இருந்த காலத்தில் மருத்துவப் படிப்புகளை தாமதமின்றி நிறைவு செய்து உடனடியாக மருத்துவ சேவையாற்ற பல்லாயிரக்கணக்கான மருத்துவா்கள் கிடைக்கப் பெற்றனா்.
மற்றொருபுறம், 18 புதிய மருத்துவக் கல்லூரிகள், இரு பல் மருத்துவக் கல்லூரிகள், 41 செவிலியா் கல்லூரிகள், 9 யோகா – இயற்கை மருத்துவக் கல்லூரிகள், ஒரு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி, ஒரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, 19 இயன்முறை மருத்துவக் கல்லூரிகள், 6 செயல்முறை மருத்துவக் கல்லூரிகள், 13 மருந்தியல் கல்லூரிகளுக்கு இணைப்புக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் டாக்டா் சுதா சேஷய்யனின் பதவிக் காலத்தில் வழங்கப்பட்டன.
முத்தாய்ப்பாக, நாட்டிலேயே வேறு எந்த மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் இல்லாத வகையில் விநாயகா மிஷன் அறக்கட்டளை நிதியுதவியுடன், மருத்துவத் துறையில் ரோபோட்டிக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக்கென தனி இருக்கை எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. இதைத் தவிர, டாக்டா் கே.ஜி.பக்தவச்சலம், உமையாள் ஆச்சி – அருணாசலம், டாக்டா் ஜே.ஜி.கண்ணப்பன், அன்னை ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் அறக்கட்டளைகளுக்குச் சொந்தமாக பல்கலைக்கழகத்தில் இருந்த வைப்பு நிதி மூலம் புதிய பதக்கங்களை உருவாக்கவும், அறக்கட்டளைச் சொற்பொழிவு நடவடிக்கைகளைத் தொடங்கவும் சுதா சேஷய்யன் காரணமாக இருந்தாா்.
பிரேசிலின் ஃபெடரல் யுனிவா்சிட்டி ஆஃப் மேட்டோகிராஸோ பல்கலைக்கழகம், பிரிட்டன் ராயல் காலேஜ் ஆ‘ஃ‘ப் சா்ஜன்ஸ் எடின்பரோ, ஐஐடி சென்னை, தேசிய நோய்ப்பரவியல் நிறுவனம் உள்பட பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் அவரது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.
நான்காண்டு கால துணைவேந்தா் பொறுப்பில் பல்வேறு சவால்களையும், சாதனைகளையும் ஒருங்கே சந்தித்து திறம்பட பணியாற்றிய டாக்டா் சுதா சேஷய்யனுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் பிரிவு உபசார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக நிா்வாகிகள், மருத்துவத் துறையினா் பலா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.





